முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்குவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என பல பொறுப்புகளை வகித்து, இன்று முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்து விட்டார் என்றே கூறலாம்.
ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணையில் அமர்ந்துள்ள திமுக, தங்களது ஒவ்வொரு பணியினையும் மிகுந்த கவனமுடன் செய்து வருகின்றது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தான் பதவியேற்றாலும், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே கொரோனா செயல்பாடுகளை கையில் எடுக்க தொடங்கிவிட்டார். இது குறித்த மிக முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சாமானியர்களின் ஏக்கம் இதற்கிடையில் இந்த நாள் சாமானிய மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில் ஒவ்வொரு முதலமைச்சர்களும் தாங்கள் முதல்வராக பதவியேற்ற பிறகு முக்கியமான, மறக்க முடியாத, மக்களுக்கு ஏற்ற முதல் அறிவிப்புகளை வெளியிடுவர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன அறிவிப்பார் என்ற ஏக்கம் சாமானியர்களின் மத்தியில் இருந்து வந்தது.
முதல்வரின் முதல் கையொப்பம் அப்படி பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தன்னுடைய முதல் கையெழுத்திலேயே சாமனிய மக்களை நெஞ்சத்தினை குளிர வைத்து விட்டார் முதல்வர் ஸ்டாலின். ஏனெனில் முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்குவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக இம்மாதமே 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தான் ஹைலைட்டே.
நெகிழ்ந்து போன தமிழக மக்கள் இன்று இந்தியாவினையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனாவினால், பணக்காரர்களை விட ஏழை மக்களுக்குத் தான் அதிக பிரச்சனை. அதிலும் நிதி ரீதியாக பின் தங்கியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். கொரோனாவால் தனியார் மருத்துவமனைகளில் சென்று மருத்துவம் பார்க்க முடியாத சூழலில், பொது மருத்துமனைகளையே மக்கள் நாடுகின்றனர். சரியான மருத்துவ சேவை கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர்.
சற்றே பாதுகாப்பு கொடுக்கும் இது இப்படி எனில் மறுபுறம் பல ஆயிரம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். வேலைகளை இழந்து அத்தியாவசிய தேவைக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களாக அண்டை மாநிலங்கள், நாடுகளில் வாழ்ந்து வந்த மக்கள் வாழ்வாதாரத்தினை இழந்து கூட்டம் கூட்டமாக வந்து கொண்டுள்ளனர். இப்படி இருக்கையில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் இந்த 4,000 ரூபாயானது அவர்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பாதுகாக்கலாம்.
டவுன் பஸ்களில் இலவச பயணம் தான் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த அறிவிப்பினை செயலாற்றும் விதமாக தனது இரண்டாவது அறிவிப்பினை கொடுத்துள்ளார். அது தமிழகம் முழுவதும் உள்ள டவுன் பஸ்களில், பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணித்துக் கொள்ளலாம் என்பது தான். இதன் மூலம் ஏற்படும் கூடுதல் செலவிற்காக 1,200 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைப்பெண்கள் பயன் தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் மிகுந்த பயனடைவதும் அடித்தட்டு குடும்பத்தினை சேர்ந்த பெண்களே. ஏனெனில் இன்று குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு செல்பவர்களில் அவர்கள் தான் அதிகம். இதே போல உயர்கல்வி கல்வி பயிலும் ஏழை மாணவிகளுக்கும் இது மிகுந்த பயனளிக்கும் எனலாம். ஏனெனில் கல்விக் கட்டணத்தையே செலுத்த முடியாத பெண்களுக்கு மத்தியில், இது இன்னும் ஊக்கத்தினை தரும்.
மக்களுக்காக பால் விலை குறைப்பு ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது மே 16 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பினால் ஏழை எளிய மக்களின் பட்ஜெட்டில் சற்று மிச்சம் செய்ய முடியும். இப்படி அதிரடியான ஒரு அறிவிப்பினை கொடுத்து ஏழை மக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நிம்மதியளிக்கும் மருத்துவ கட்டண அறிவிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் அல்ல, தனியார் மருத்துமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆக அப்படியானவர்களுக்கு நிதி சிக்கலை குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தினையும் தமிழக அரசு காப்பீட்டு திட்டம் மூலமாக ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற முடியும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பொது மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த நேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் என்பதாலேயே பலரும் செல்வதில்லை.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை பெற்று, அம்மனு மீது ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தினை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி இந்திய ஆட்சிபணி அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படியும் மக்கள் எளிதில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அணுக முடியும் எனலாம்.
COMMENTS