சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தி...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் பல நகரங்களிலும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது.
இதனையடுத்து புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் இரவு நேர ஊரடங்கு, பிளஸ் டூ தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் இதுவரை கொரோனா பரவலில் 5-ம் இடத்தில் இருந்து வந்தது தமிழகம். தற்போது 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 9 ஆயிரத்தை தாண்டியதாக உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,80,728. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,071. தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65,635 ஆக உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று சேலத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். சென்னையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இரவு நேர ஊரடங்கு
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.
அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் ,மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
ஊடகம் பத்திரிகை துறையினர் தொடரந்து இரவிலும் செயல்படலாம்
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் ,சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட் அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
COMMENTS