சேலம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில், 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப...
சேலம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில், 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஒரு மினி லாரியும், பைக்கும் மோதிக் கொண்டதால், டிராபிக் நெரிசல் ஏற்பட்டபோது வேகமாக வந்த லாரி நின்று கொண்டிருந்த 15 வாகனங்கள் மீது வரிசையாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் பெங்களூரிலிருந்து சேலம் என தொப்பூர் கணவாய் 4 வழிச்சாலையாகும். இந்த பக்கம் 2 பாதை, எதிர்ப்பக்கம் 2 பாதை என வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேலத்திலிருந்து பெங்களூர் செல்லும்போது உயரத்தில் ஏற வேண்டும், பெங்களூரிலிருந்து சேலம் வரும் வாகனங்கள், பள்ளத்தை நோக்கி பாய்ந்து வர வேண்டும்.
சவாலான தொப்பூர் சாலை:
இந்த சாலையின் வடிவமைப்பு திருப்திகரமாக இல்லை. எனவே கனரக வாகனங்கள் மேலே ஏறும்போது மிகவும் தடுமாறுகின்றன. லாரிகள் நகர்கிறதா, அல்லது நின்று கொண்டு இருக்கிறதா என்பது தெரியாத அளவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்ல முடியும். எனவே பின்னாலிருந்து வேகமாக செல்லும் கார் போன்ற வாகனங்கள் லாரிகள் மீது மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மறு மார்க்கத்தில் பள்ளத்தை நோக்கி வேகமாக வாகனங்கள் செல்லும்போது வாகனங்கள் நிலைதடுமாறி பிற வாகனங்கள் மீது மோதுவது அல்லது, கவிழ்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் அடிக்கடி இதுபோல விபத்துகள் நடப்பதால் உயிரிழப்பு, காயம், சேதம் போன்றவற்றோடு, பெரும் டிராபிக் நெரிசலும் ஏற்படுகிறது.
தொப்பூர் விபத்து:
இந்த நிலையில்தான், தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில், சேலம் டூ பெங்களூர் சாலையில், 15 வாகனங்கள் இன்று மாலை ஒன்றன் பின் ஒன்றாக மோதியுள்ளன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 3 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் என, 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கலெக்டர் ஆய்வு:
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகா இன்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தொப்பூர் கணவாய் பகுதி 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அதிலும் குறிப்பாக நான்கு கிலோமீட்டர் பகுதி மிகவும் ஆபத்தானது. பெங்களூர் மற்றும் சேலம் சாலை என்பதால், கனரக வாகனங்கள் அதிக அளவுக்கு வருகின்றன. எனவே வண்டி கவிழ்வது வாடிக்கையாகிவிட்டது.
2வது கியரில் போக ஒலி பெருக்கி:
வாகனங்கள் மெதுவாக போக வேண்டும், வாகனங்கள் இரண்டாவது கியரில் போக வேண்டும் என்பது போன்ற எச்சரிக்கை பலகைகளையும், எச்சரிக்கை ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளையும் சமீபகாலமாக இங்கு அமைத்துள்ளோம். ஆனால், இது தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பள்ளங்களை சரி செய்ய வேண்டும்:
இந்த சாலையை, நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்க கேட்டுக் கொண்டிருக்கிறோம். மிகவும் பள்ளமான பகுதிகள் இருப்பதால்தான் விபத்து அதிகம் நடக்கிறது. இந்த பள்ளங்களை சரிசெய்து சாலையை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
நன்றி ஒன் இந்தியா !
COMMENTS