பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பவானி ஆகிய பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, பவானி ஆகிய பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 32.8 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டி வருகிறது. பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டிருக்கும் உபரி நீரூம், நீலகிரியில் இருந்து வரும் மாயாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.
இதனால் கடந்த சில நாள்களாகவே பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமானதோடு, நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் நேற்றிரவு 100 அடியை எட்டியது. இன்று காலை 10 மணி நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 அடியாக இருக்கிறது. மேலும், அணைக்கு 5,000 கன அடி அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் 500 கன அடி, காலிங்கராயன் வாய்க்கால் 500 கன அடி என மொத்தம் 1,000 கன அடி நீர் பாசனத்திற்காக வாய்க்காலில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
அணையின் உயரம் 105 அடியாக இருந்தாலும், பாதுகாப்பு விதிமுறைகளின் படி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டினால், பவானி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். தற்போதையை நீர்வரத்தைப் பார்க்கையில் இன்னும் 5 நாள்களுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 7 நாள்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 14 அடிக்கு உயர்ந்திருக்கிறது. 1955-ல் கட்டி முடிக்கப்பட்ட பவானிசாகர் அணை வரலாற்றில், 26-வது முறையாக நீர்மட்டம் 100 அடியைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS