டெல்லி: போபோஸ் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவை படம் எடுத்து அனுப்பியுள்ளது இந்திய விண்கலமான மங்கள்யான். இஸ்ர...
டெல்லி: போபோஸ் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவை படம் எடுத்து அனுப்பியுள்ளது இந்திய விண்கலமான மங்கள்யான்.
இஸ்ரோவால், 2013 நவம்பர் 5ஆம் தேதி ஆளில்லாத விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் மங்கள்யான் என்று அழைக்கப்படுகிறது. இது செவ்வாய் கோளில் ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் 2014 செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது.
இந்த விண்கலத்துடன் கலர் கேமராவும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கேமரா தற்போது அரிய புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் படத்தை ஜூலை ஒன்றாம் தேதி விண்கலம் எடுத்துள்ளது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கி. மீட்டர் தொலைவிலும், போபோஸ் சந்திரனிடமிருந்து 4,200 கி. மீட்டர் தொலைவிலும் இருந்து இந்தப் புகைப்படத்தை விண்கலம் எடுத்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் இஸ்ரோ, ''இந்தப் புகைப்படத்தின் அளவு 210 மீட்டராக இருக்கிறது. இது கம்போஸ் செய்யப்பட்ட புகைப்படம். 6 MCC பிரேமில் எடுக்கப்பட்டது. வண்ண நிறங்களில் எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.
இந்த போபோஸ் சந்திரன் விண்கற்களால் ஆனது என்றும், இதில் தண்ணீர் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. கடந்த கால விண்கற்கள் மோதலில் இருந்து இந்த கோள் உருவாகி இருக்கலாம் என்று இஸ்ரோ நம்புகிறது.
துவக்கத்தில் இந்த மங்கள்யான் விண்கலம் ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் செயல்படும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது. ஆனால், அதில் போதிய எரிவாயு இருப்பதால், பல ஆண்டுகளுக்கு செயல்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அங்கு இருக்கும் தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டது. ரஷ்யா, அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக செவ்வாய் கோளை அடைந்த நான்காவது விண்கலமாக மங்கள்யான் உள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.
COMMENTS