உடல்நலக் குறைவு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியவில்லை.
சென்னை: சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 62.
உடல்நலக் குறைவு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருந்தது சோதனை மூலம் கண்டறியப்பட்டது. மேலும், அவருக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியவில்லை.
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திமுக எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை அடுத்து கடந்த 2-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுநீரகத்தில் சிறிய பிரச்சனையும், கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது.
ஜெ.அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்த காரணத்தால் அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஆகிஸிஜன் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாததால் நிலைமை கவலைக்கிடமானது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன் தினம் மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டு அதில் அன்பழகனின் உடல்நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.
இதனிடையே மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜெ.அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ.அன்பழகன் மறைவுச்செய்தியை அறிந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை முன் சென்னை மேற்கு மாவட்ட திமுகவினர் குவியத் தொடங்கினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
மறைந்த ஜெ.அன்பழகன் திமுக சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 2001-ல் தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். ஜெ. அன்பழகன் மகன் ராஜா கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் தம்பி ஜெ.கருணாநிதி மட்டும் வட்டச்செயலாளராக உள்ளார்.
COMMENTS