Chennai LockDown
சென்னையை காப்பாற்றுவதற்காக போலீசார் தங்கள் உயிரை பணயம் வைத்து அதிரடி காட்டி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. குறிப்பாக தமிழக தலைநகர் சென்னை, கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சென்னையில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19ம் தேதி அமல் செய்யப்பட்ட இந்த ஊரடங்கு வரும் ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த 12 நாட்கள் ஊரடங்கிற்கு பின், நிலைமையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுவதற்கு முன்னதாக அமலில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது சென்னையில் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மருத்துவர்களை போன்று காவல் துறையினரும் தங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
சென்னையில் தற்போதைய நிலையில் அவசர கால வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை சாமான்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கும்படி மக்களுக்கு காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அப்படி நடந்து செல்வதாக இருந்தாலும், 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள மன உளைச்சலுக்கு மத்தியில், தங்கள் உயிரை பணயம் வைத்து போலீசார் பணியாற்றி வரும் நிலையில், இன்னமும் ஒரு சில வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என கூறப்படுகிறது.
காவல் துறை அறிவித்துள்ள கடும் கட்டுப்பாடுகளை மீறி சென்னையில் ஆங்காங்கே இன்னமும் ஒரு சிலர் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். அத்தகைய நபர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன்படி சென்னையில் ஒரே நாளில் 7,413 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விதிகளை மீறியதாக ஒரே நாளில் 8,105 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 7,413 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 6,926 டூவீலர்களும், 215 ஆட்டோ ரிக்ஸாக்களும், 272 இலகுரக மோட்டார் வாகனங்களும் அடக்கம். இது கடந்த ஜூன் 22ம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 23ம் தேதி காலை 6 மணி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை.
அதாவது 24 மணி நேரத்தில், 7,413 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அளவில் பார்த்தால், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, சென்னை முழுவதும் பெருநகர போலீசார் பல்வேறு இடங்களில் செக்-பாயிண்ட்களை அமைத்துள்ளனர்.
வாகனங்களின் இயக்கத்தை கண்காணிப்பதற்காக இந்த செக்-பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் டூவீலர்கள் மற்றும் கார்களில் ரோந்து செல்லும் பணிகளையும் சென்னை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை குறைப்பதற்காக, காவல் துறை தரப்பில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய காரணத்தால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங்கின் காரை, கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீசார், தங்கள் பகுதிகளில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
COMMENTS