சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக உயர்ந்து 771 என்ற அளவில் உள்ளது...
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக உயர்ந்து 771 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தின் மொத்த பாதிப்பு 4829 ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 771 பேரில், ஆண்கள் 575 பேர். பெண்கள் 196 பேர். சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 2332 என்ற அளவுக்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு என்பது 35 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 31. தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,516 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோர் 3275 பேர். இவ்வாறு அரசு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
கோயம்பேடு சந்தையுடன் தொடர்புள்ளவர்களில் பெரும்பாலானோருக்குத்தான், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால், மக்கள் அதிகம் அச்சப்பட வேண்டாம் என்கிறார்கள், மருத்துவ வல்லுனர்கள். இன்று மட்டும், 13,413 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகமாக இருப்பதால், பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் சிலர் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும், தமிழகத்தில் நேற்று முன்தினம், 527, நேற்று 508 என பாதிப்பு இருந்த நிலையில், இன்று 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது கவலையளிக்க கூடிய விஷயமாகும்.
இன்றைய பாதிப்பில் வழக்கம்போல சென்னையில் அதிகம் பதிவாகியுள்ளது. ஆனால் எதிர்பாராத மாவட்டம் அரியலூர். சிறிய மாவட்டமான அங்கு இன்று 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்தான். எனவே, யாராவது சென்னையிலிருந்து அதிலும், குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து சொந்த ஊர் சென்றிருந்தால் அவர்களாகவே, மருத்துவர்களை அணுக வேண்டும், அல்லது, ஊர்க்காரர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுப்பது நல்லது.
COMMENTS