சென்னை: வடசென்னையின் ஒரு பகுதியான ராயபுரத்தில் துப்புரவு பணி மேற்கொண்ட 58 வயது நபருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை...
சென்னை: வடசென்னையின் ஒரு பகுதியான ராயபுரத்தில் துப்புரவு பணி மேற்கொண்ட 58 வயது நபருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ராயபுரம் வடசென்னைக்குள்பட்ட பகுதியாகும். சீனாவுக்கு ஒரு வுகானை போல் சென்னையில் கொரோனா நோய் பரப்பும் மையமாக ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த ராயபுரத்தில் 490 பேருக்கும், திருவிகா நகரில் 477 பேருக்கும் அது போல் கோடம்பாக்கத்தில் 546 பேருக்கும் கொரோனா பாதிப்புள்ளது. இது நேற்று முன் தினத்தின் நிலவரம். இவ்வாறு தமிழகத்தின் 50 சதவீத கொரோனா கேஸ்கள் சென்னையிலிருந்துதான்.
இந்த நிலையில் நோய் பரப்பும் ராயபுரம் உள்ளிட்டவை கன்டெய்ன்மென்ட் பகுதிகளாகும். இங்கு துப்புரவு பணியை 58 வயது நபர் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி பணியாளர் ஆவார்.
இவர் ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பலியாகும் முதல் துப்புரவு தொழிலாளி இவர் என கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்னர் ஒரு துப்புரவு தொழிலாளிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு பலியானார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை.
COMMENTS