டெல்லி: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனையை இலவசமாக நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பி...
டெல்லி: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனையை இலவசமாக நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த தொற்றை உறுதி செய்வதற்கான ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனை ஆய்வகங்கள் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சோதனை நடத்துவதற்கான அனுமதியை மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனோ வைரஸ் சோதனைக்கு ரூ.4500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்தக் கட்டணத்தை திருமப்பெற்று இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும் என பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். மேலும், கொரோனா பாதிப்புடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் சிலர் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் இன்று விசாரணை வந்தன.
இந்நிலையில் அந்த புகார் மனுக்கள் மீதான விசாரணையை காணொலி காட்சி மூலம் நடத்திய உச்சநீதிமன்றம், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பு நலன் மீது மத்திய அரசு கவனம் செலுத்தி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை நடத்தும் ஆய்வகங்களும், லேப் டெக்னீசியன்களும் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காட்டிய வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவை மீறி கொரோனா சோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
COMMENTS