சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அந்நாட்டில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் லீ ஹ்சிய...
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அந்நாட்டில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியபோது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். கடுமையான கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியது. சிங்கப்பூரில் கட்டுமானம் முதல் தூய்மைப்பணி வரை பல்வேறு துறைகளில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது.
ஏப்ரல் 8ம் தேதி 1600 ஆக இருந்த கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்தது. ஏப்ரல் 18ம் தேதி 942 பேருக்கும், ஏப்ரல் 19ம் தேதி 596 பேருக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
நேற்று மட்டும் 1,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,014 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 1111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,125 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிங்கப்பூரில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 800 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிங்கப்பூரில் ஊரடங்கு ஜுன்1ம் தேதி நீட்டிக்கப்படுவதாக . பிரதமர் லீ ஹ்சியன் லூங் அறிவித்துள்ளார். முன்னதாக பெரும்பாலான பணிகள் மற்றும் பள்ளிகளின் மூடல்கள் அடங்கிய இந்த ஊரடங்கு நடவடிக்கைகள் ஆரம்பத்தில் ஏப்ரல் 7 முதல் மே 4 வரை அமல்படுத்தப்பட்டன. இப்போது ஊரடங்கு மேலும் 4 வாரத்திற்கு ஜுன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசிக்கிறார்கள். கொரோனா பாதிப்பு வெளிநாட்டினர் தங்கியுள்ள முகாம் பகுதியில் தான் மோசமாக பாதித்திருப்பதால் கவலைகளை அதிகரித்துள்ளது.
COMMENTS