கோவிட் 19 தடுப்பிற்காக நாம் அனைவரும் ஊரடங்கு காலத்தில் உள்ள நிலையில், வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் அவர்கள் கால்நடை வ...
கோவிட் 19 தடுப்பிற்காக நாம் அனைவரும் ஊரடங்கு காலத்தில் உள்ள நிலையில், வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் அவர்கள் கால்நடை வளர்ப்போர் கடைப்பிடிக்க வேண்டிய தீவன மேலாண்மைக்கான தொழில்நுட்பங்கள் குறித்து கூறியதாவது:
விவசாயிகள் அனைவரும் வேளாண் மற்றும் அதனை சார்ந்த அனைத்து துறைகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் இடுப்பொருட்கள் வாங்குவதற்கு ஊரடங்கு காலத்திலும் வேளாண் அறிவியல் மையத்திற்கு வரலாம். தற்பொழுது கால்நடை வளர்ப்பில் செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். எனவே வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 7598869275 அலைபேசியின் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ வேளாண் அறிவியல் மையத்திற்கு வந்து விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.
நமது வயல்களில் கிடைக்கும் வேளாண் கழிவு பொருட்களை கால்நடைகளுக்கு தீவனமாக விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தீவன செலவு பெருமளவில் குறைகின்றது. கால்நடைகளுக்கு கரும்பு தோகைகளை, ஊறுகாய் புல்லாக மாற்றி தீவனமாக பயன்படுத்தலாம். மாடுகளுக்கு 15- 20 கிலோ மற்றும் ஆடுகளுக்கு 1-2 கிலோ என கரும்பு தோகையை தீவனமாக அளிக்கலாம். கரும்பு தோகையை தீவனமாக பயன்படுத்துவதால் உடல் நலமோ அல்லது இனப்பெருக்கத் திறனோ பாதிக்கப்படுவதில்லை. உலர்த்திய மரவள்ளிக் தோலை மாடுகளுக்கு நாளொன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரையும், ஆடுகளுக்கு அரை கிலோ வரையும் தீவனமாக அளிக்கலாம் அல்லது கலப்பு தீவனத்தில் 30 சதவிகிதம் வரை கலந்து அளிக்க வேண்டும்.
ஈரமாக உள்ள மரவள்ளி திப்பியை 3 முதல் 5 கிலோ வரை கால்நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது உலர்த்திய திப்பியை 30 சதவிகிதம் வரை கலப்பு தீவனத்தில் சேர்க்கலாம். கருவேல் காய்களை கலப்பு தீவனத்தில் 30 சதவிகிதம் வரை கலந்து கொடுக்கலாம். முட்கள் உள்ள கள்ளிச்செடிகளை நெருப்பில் வாட்டுவதால் முட்கள் கருகிவிடும். மீதம் உள்ள கள்ளிச்செடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கள்ளிச்செடிகளில் அதிக நீர் சத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் வறட்சி காலங்களில் இதை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். பால் மாடு, உழவு மாடுகளுக்கு 1 -1.5 கிலோ, முட்டை, இறைச்சிக்கோழிகளுக்கு 20-30 கிராம், ஆடுகளுக்கு 300-500 கிராம்; என்ற அளவில் அசோலாவினை தீவனமாக கொடுக்கலாம்.
COMMENTS