சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்சமான நோயாளிகள் எண்ணிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை 673 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு 12, கள்ளக்குறிச்சி 3, காஞ்சிபுரம் 1, நாமக்கல் 2 என்று நோயாளிகள் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் புதிய நோயாளிகள் யாரும் இன்று கண்டறியப் படவில்லை.
இதுவரை தமிழகத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பரிசோதனை அளவு மிகக் குறைவு என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டி ஆகவேண்டும்.
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 1874 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று மட்டும் 7 ஆயிரத்து 93 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதி 55 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஏப்ரல் 22ம் தேதி 15 பேருக்கு பாதிப்பு இருந்தது. ஏப்ரல் 23ம் தேதி 27 பேர், ஏப்ரல் 24ஆம் தேதி 52 பேர், 25ஆம் தேதி 43 பேர், 26ஆம் தேதி 28 பேர், 27 ஆம் தேதி 47 பேர் பாதிக்கப்பட்டதாக பதிவாகி இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்திலும் சரி, சென்னையிலும் சரி, இன்றுதான் ஒரே நாளுக்கான, எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை உரிய வகையில் தமிழக மக்கள் பின்பற்றவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய மீட்டிங்கில் ஆதங்கம் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் நிலவிய மக்கள் கூட்டத்தை உதாரணமாக கூறியிருந்தார். இந்த கருத்து வெளியான இன்றைய தினம், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS