சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனையை 1 மணி நேரத்திற்குள் செய்ய உதவும், 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் முதல்கட்டமாக தமிழகம் வந்துள்ளது. ஆனால், ...
சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனையை 1 மணி நேரத்திற்குள் செய்ய உதவும், 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் முதல்கட்டமாக தமிழகம் வந்துள்ளது. ஆனால், இது ஆர்டர் செய்த அளவான 4 லட்சத்துடன் ஒப்பிட்டால், யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போன்றதுதான்.
கொரோனா வைரஸ் பாதிப்பை உடனடியாகக் கண்டு பிடிப்பதற்கு ரேப்பிட் டெஸ்ட் என்ற ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் இந்த ரேப்பிட் டெஸ்ட் கருவி, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தெரிவித்து விடும்.
சீனாவிலிருந்து இது போன்ற கருவிகளை மத்திய அரசு தமிழக அரசு ஆர்டர் செய்து இருந்தது. ஆனால் அது அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த பரிசோதனை கருவிகளுக்காக காத்திருந்தது தமிழகம். மத்திய அரசு அதை வாங்கி ஒவ்வொரு மாநிலத்துக்கும் பகிர்ந்து கொடுக்கும் என்று அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் சீனாவிலிருந்து, முதல் கட்டமாக 24,000 ரேப்பிட் பரிசோதனை கருவிகள் சென்னை வந்துள்ளன. இன்று மாலை அனைத்து பகுதிகளுக்கும் அது அனுப்பிவிடப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்த கிட்கள் தற்போதைய நடைமுறையில் பரிசோதனை செய்யும் பிசிஆர் சோதனை முறைகள் போல முழுக்க நம்பகத் தன்மை கொண்டவை இல்லை.
இந்த கிட்களை வைத்து பரிசோதனை செய்த பிறகு, பிசிஆர் சோதனையும் செய்து பார்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். குறிப்பாக பாசிட்டிவ் என காட்டினால் பிசிஆர் சோதனை செய்யாமல் சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்க மாட்டார்கள்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் ஏப்ரல் 9ம் தேதி இரவே தமிழகத்திற்கு வந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால் இன்றுதான் கிட் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய இக்கட்டான சூழலில் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனை செய்வதற்கு தமிழகத்தில் 19 கொரோனா பரிசோதனை கூடங்கள் மட்டுமே உள்ளது. அங்கேயும் நாள் ஒன்றுக்கு 600 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடிகிறது.
இந்நிலையில் தான், ஒரு மணி நேரத்திற்குள், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியக் கூடிய ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்கி தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி சுமார் 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் கொடுக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அறிவித்தார். ஆனால், மத்திய அரசு, திடீரென ரேப்பிட் டெஸ்ட் கருவியை மாநிலங்கள் நேரடியாக வாங்க தடை விதித்தது. மத்திய அரசு சார்பில் 10 லட்சம் ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் வாங்க இருப்பதாகவும், அப்படி வாங்கிய பிறகுதான், அவை தமிழகத்துக்கு பிரித்து தரப்படும் என்றும் கூறியது.
இந்த நிலையில்தான், வெறும் 24,000 ரேப்பிட் டெஸ்ட் கருவிகள், தமிழகம் வந்துள்ளன. 4 லட்சம் ஆர்டர் கொடுக்கப்பட்டதற்கும், வந்துள்ள கருவிகள் எண்ணிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம் இருப்பதால், வேகமாக பரிசோதனைகள் செய்யப்படுவதில் சிக்கல் எழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
COMMENTS