கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில், கடந்த மார்ச் 2020-ல் தான் மத்திய ரிசர...
கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில், கடந்த மார்ச் 2020-ல் தான் மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத கடன் தவணைகளை, ஒத்திப் போட வங்கிகள் அனுமதிக்கலாம் என்றது.
ஆனால் இப்போது சில வங்கி அதிகாரிகள், இந்த 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போட்டால் போதாது, 6 மாதங்களாவது இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போட வேண்டும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் பேசி இருக்கிறார்கள்.
ஏன் 6 மாதம் இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போடக் கேட்கிறார்கள்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
கவனம் மாற்றம் கடந்த 2012 - 13 கால கட்டத்தில் தொழில் துறையினர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள், வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை. எனவே வாரா கடன் அதிகரித்தது. எனவே தனியார் மற்றும் அரசு வங்கிகள் தங்கள் கவனத்தை தனி நபர் சில்லறைக் கடன்கள் பக்கம் திருப்பினார்கள்.
சில்லறைக் கடன்கள் இந்தியாவில் சில்லறை தனி நபர் கடன்கள் (வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், ஃபிக்ஸாட் டெபாசிட்டுக்கு எதிரான கடன்) மட்டும் சுமார் 24.97 லட்சம் கோடி ரூபாய்க்கு கொடுத்து இருக்கிறார்களாம். இது ஜனவரி 2020 கணக்கு. ஆக இந்த 24.97 லட்சம் கோடி ரூபாயை தனி நபர்கள் தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கொடுத்திருக்கும் மொத்த கடன்களில் சுமார் 37% கடன்கள் சில்லறைக் கடன்கள் தான். எஸ்பிஐ கொடுத்திருக்கும் மொத்த கடனில், சில்லறைக் கடன்கள், கடந்த ஆண்டில் 33 %-மாக இருந்தது, இந்த 2019 - 20 நிதி ஆண்டில் (பிப்ரவரி 2020 வரை) 37% ஆக ஆதிகரித்து இருக்கிறது. சில்லறைக் கடன்கள் தான் சுமார் 17% வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் கடன் வளர்ச்சி 6 %-மாக இருப்பதாகச் சொல்கிறது ஆர்பிஐ தரவுகள். ஆக வங்கிகள் தங்கள் கடன் வியாபாரத்தை பெருக்க சில்லறை கடன்களை அதிகம் பயன்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கடன் வளர்ச்சி ஏப்ரல் 2019 - பிப்ரவரி 2020 வரையான காலத்தில், ஒட்டு மொத்த சில்லறை தனி நபர் கடன்களில் 52.5 சதவிகித கடன்கள் வீட்டுக் கடன்கள். வீட்டுக் கடன்கள் மேலே சொன்ன காலத்தில் 17.1 % வளர்ச்சி கண்டிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு 18.8 % வளர்ச்சி கண்டதாம். ஆக வீட்டுக் கடன், தான், ஒரு கணிசமான பகுதி சில்லறை கடனாக இருக்கிறது.
மற்ற சில்லறை கடன்கள் வீட்டுக் கடன் போக, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் (டிவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மிஷின், ஏசி...) பொருட்களுக்கான கடன் 43.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. க்ரெடிட் கார்ட் நிலுவைத் தொகைகள் 33 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கின்றன. வாகன கடன்கள் 10.3 சதவிகிதம் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறன.
ஆர்பிஐ எச்சரிக்கை கடந்த டிசம்பர் 2019 கால கட்டத்திலேயே, சில்லறை கடன்களை நோக்கி, வங்கிகள் நகர்வதை எச்சரித்து இருக்கிறது ஆர்பிஐ. வங்கிகள் தங்கள் கடனுக்கான ரிஸ்கை குறைத்துக் கொள்ள இப்படி செய்வதிலும் சில எல்லைகள் இருக்கின்றன என முன்பே சொல்லி இருக்கிறது. பொருளாதாரத்தில் நுகர்வு குறைந்தால், டிமாண்ட் அடி வாங்கும். அதோடு சில்லறை கடன்களின் தரமும் அடி வாங்கும் என எச்சரித்து இருக்கிறது ஆர்பிஐ.
6 மாதம் வேண்டும் இதனால், கடன்களுக்கான, 3 மாத EMI தவணைகளை ஒத்திவைத்தால் போதாது, 6 மாத காலத்துக்காவது, கடன்களுக்கான EMI தவணைகளை ஒத்திப் போட வேண்டும் என வங்கித் துறைக்குள்ளேயே பேசத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். வங்கியாளர்களை தொடர்பு கொண்ட போதும் 6 மாத EMI தவணைகளை ஒத்தி வைக்கச் சொல்லி இருக்கிறார்களாம். மற்ற பல நாடுகள் இப்படி 6 மாத EMI தவணைகளை ஒத்தி போட்டு இருபப்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
கடன் தவணை ஒத்தி வைப்பு உதாரணம் சிங்கப்பூர் வீட்டுக் கடனுக்கான தொகைகளை டிசம்பர் 31 வரை ஒத்திப் போட வழி வகை செய்திருக்கிறது. மலேசியா 6 மாத காலம் கடன் தவணைகளை ஒத்திப் போட அனுமதித்து இருக்கிறது. அமெரிக்காவின் Fannie Mae and Freddie Mac தன் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் கடன் தவணைகளை 12 மாதங்களுக்கு ஒத்திப் போட வழி வகை செய்து இருக்கிறது.
ஆர்பிஐ இப்போது மீண்டும் ஆர்பிஐ கையில் தான் எல்லாமே இருக்கின்றன. மேலே வங்கியாளர்கள் சொன்னது போல, 6 மாதத்துக்கு கடன் தவணைகளை ஒத்திப் போடுமா? அல்லது கடனைத் திருப்பிட் செலுத்தாவர்கள் (Defaulters) எண்ணிக்கை அதிகரிப்பை எதிர் கொள்ளுமா? இந்த இக்கட்டான சூழலை ரிசர்வ் வங்கி எப்படி எதிர் கொள்ள இருக்கிறது என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி.
நன்றி தமிழ் குட்ரிட்டன்ஸ்!
COMMENTS