இந்தியாவின் முன்னணி நிதியியல் நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 3.5 லட்சம் வாடிக்கையாளர்...
இந்தியாவின் முன்னணி நிதியியல் நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 3.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 7 காலாண்டுகளாகத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து இந்நிறுவனம் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களையும் பங்குச்சந்தை மதிப்பில் ஏமாற்றம் கொடுத்துள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு முன்னணி நிதியியல் நிறுவனமாகத் திகழும் பஜாஜ் பைனான்ஸ் கடந்த 7 காலாண்டுகளாகத் தான் நிர்வகிக்கும் (AUM) சராசரியாகச் சுமார் 37 சதவீத வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால் முதல் முறையாக மார்ச் 2020 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் AUM வளர்ச்சி அளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் எதிரொலியாக நாட்டின் மொத்த வர்த்தகமும் முடங்கிப்போன நிலையில் பஜாஜ் பைனான்ஸ் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது, இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் AUM வளர்ச்சி விகிதம் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் எவ்விதமான திட்டமிடலும் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு இயங்க வேண்டிய சூழ்நிலையில் தாங்கள் உள்ளதாகவும் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 4,878 ரூபாயாக இருந்த நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 1.8 சதவீத உயர்வுடன் 2,249 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது கிட்டதட்ட 45 சதவீத சரிவு, இந்த மிகப்பெரிய சரிவின் காரணமாகப் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்து உள்ளனர்.
COMMENTS