டெல்லி: விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அரசு முடிவெடுத்த பின்னரே, புக்கிங்குகளை, ஆரம்பிக்குமாறு, மத்திய சிவில் விமான போக்குவரத்...
டெல்லி: விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அரசு முடிவெடுத்த பின்னரே, புக்கிங்குகளை, ஆரம்பிக்குமாறு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அனைத்து விமானங்களுக்கும், முன்பதிவு செய்வதை ஏர் இந்தியா நிறுத்திவிட்டதாக, அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 3 ஆம் தேதி, முதல் ஏப்ரல் 30 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுத்தியிருந்து. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் மே 4 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஜூன் 1 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்களை இயக்கப்போவதாக அறிவித்து, முன்பதிவை ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான், ஹர்தீப் சிங் பூரி, இப்படி ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். இதை ஏற்று முன்பதிவு நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இருப்பினும், தனியார் துறை விமான நிறுவனங்கள் மே 4 முதல் முன்பதிவுகளைத் தொடர்ந்து வருகிறது. ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் அதற்கு பதிலாக எதிர்கால பயணங்களுக்கு வவுச்சர்களை வழங்குவதாகவும் பல பயணிகள் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 16 ம் தேதி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மே 3 ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு யாராவது, டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், முழு பணத்தைத் திரும்ப பெறலாம் என்று, தெரிவித்து இருந்தது.
கொரோனா வைரஸ் பிரச்சினை கட்டுப்படவில்லை என்பதால், விமான புக்கிங்குகளை நிறுத்துவதற்கு, மத்திய அமைச்சர் உத்தரவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
COMMENTS