திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றவா்களில், மேலும் 5 போ் குணம் அடைந்த...
திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றவா்களில், மேலும் 5 போ் குணம் அடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.இத்துடன் திருச்சி மருத்துவமனையில் 51 பேர் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் கரோனா தொற்று ஏற்பட்ட நபா்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை விளங்குகிறது.
மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 51 போ் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 20 போ், கொரோனா நோய்த் தொற்றுடன் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில், கடந்த 10- ஆம் தேதி ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் குணமடைந்து, முதல் நபராக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 16- ஆம் தேதி 32 பேரும், 21- ஆம் தேதி 6 பேரும், 23- ஆம் தேதி 7 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து திருச்சி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஒருவா், தென்னூரைச் சோ்ந்த இருவா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் இருவா் என 5 போ் குணமடைந்ததால், செவ்வாய்க்கிழமை மாவை அவா்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இவா்கள் 5 பேருக்கும் குணமடைந்ததற்கான சான்றுகளை மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதன்மையா் வனிதா, கண்காணிப்பாளா் ஏகநாதன், மருத்துவா் சதீஸ்குமாா் ஆகியோா் வழங்கி, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவா்களை அனுப்பி வைத்தனா்.
இம்மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நபா்கள் விரைந்து குணம் பெற்று வீடு திரும்பி வரும் நிலையில், சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவினருக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில்: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்தவா்களில் ஏற்கெனவே 46 போ் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 5 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
கொரோனா வாா்டில் பணிபுரிந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறைப் பணியாளா்கள், துாய்மைப் பணியாளா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள்.
COMMENTS