கொரோனாவைரஸுக்கு எதிராக போராடி வரும் தேசத்துக்கு உதவ முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ. 1500 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளார். மிகப...
கொரோனாவைரஸுக்கு எதிராக போராடி வரும் தேசத்துக்கு உதவ முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ. 1500 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மிகப் பெரும் நெருக்கடியில் தேசம் சிக்கியுள்ளது. இதுதான் நாம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டிய நேரம்.. இதற்காக இந்த உதவியை வழங்குவதாக ரத்தன் டாடா டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ் எதிர்ப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக பெருமளவில் நிதியும் தேவைப்படுகிறது. இதையடுத்து இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் பலரும் நிதியுதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். பொதுமக்களும் நிதியுதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த வரிசையில் ரத்தன் டாடா மிகப் பெரிய நிதியுதவியை அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக ரூ. 500 கோடி உதவியை அவர் டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் அறிவித்தார். இந்த பணத்தைக் கொண்டு களப் பணியில் ஈடுபட்டிருப்போருக்குத் தேவையான பாதுகாப்பு சாதனங்களை வாங்கவும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான செயற்கை சுவாசக் கருவிகளை தயாரிக்கவும், சோதனை கிட்டுகளை வாங்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் கொரோனாவைரஸ் எதிர்ப்பு்ப போரில் டாடா டிரஸ்ட் மற்றும் குழும நிறுவனங்கள் அனைத்தும் கை கோர்த்து செயல்படும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 1000 கோடி நிதியுதவியை டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்த நிதி டாடா சன்ஸ் சார்பாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை டாடா சன்ஸ் குழும தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா டிரஸ்டுகள் மற்றும் எங்களது தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் இந்த போரில் டாடா நிறுவனங்களின் உறுதியான செயல்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். அனைவரும் இணைந்து இந்த போரில் வெல்லத் தேவையான பணிகளை மேற்கொள்வோம்.
டாடா டிரஸ்ட் அறிவித்த உதவியோடு, கூடுதலாக டாடா சன்ஸ் சார்பில் ரூ. 1000 கோடி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை மேம்படவும், இந்த நோயிலிருந்து மீண்டு வரும் தேவையான அனைத்து உதவிகளையும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்ளும். நாடு வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துள்ளது. அனைவரும் நம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும் நேரம் இது என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.
COMMENTS