கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த செய்தியா...
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஏழைகளுக்கான பொருளாதார பேக்கேஜ் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.
அதன்படி ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி பேக்கேஜை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் ஏழை எளியவர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அவரது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் இதோ:
- மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் தலா 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஆஷா பணியாளர்கள், பாரா மெடிக்கல் நர்சுகள் போன்றோர் இதன் கீழ் பலன் பெறுவார்கள்.
- நாட்டின் எட்டு கோடி ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படுவதை விட அதிகமாக ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இவ்வாறு வழங்கப்படும்.
- பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி பெறக்கூடிய விவசாயிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் 2000 ரூபாய் வங்கி கணக்கில் வழங்கப்படும்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒருநாள் கூலி 182 ரூபாய் என்பது 202 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- முதியோர், கணவனை இழந்தோர் போன்றோருக்கு வழங்கப்படும் உதவி தொகை, அடுத்த மூன்று மாதங்களில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- ஜன் தன் மகளிர் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படும். 20.5 கோடி பெண்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும். 8.3 கோடி மக்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
- முன்பு 10 லட்சம் வரையிலான பிணை இல்லா கடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது, அது 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் ஏழுகோடி மக்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.
- அதிகபட்சம் 100 பணியாளர்களை வேலைக்கு வைத்துள்ள மற்றும் அதில் 90 சதவீதம் ஊழியர்கள் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறக்கூடிய நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளிகள் ஆகிய இருவருக்குமான பிஎஃப் தொகையை அரசு செலுத்திவிடும்.
- அதாவது, 24 சதவீத பிஎஃப் தொகையை அடுத்த, மூன்று மாதங்களுக்கு அரசு செலுத்திவிடும். 4.8 கோடி தொழிலாளர்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.
- கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி மாநில அரசால் செலவிடப்படும் வேண்டும். 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படலாம். இதனால், 3.5 கோடி தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.
COMMENTS