கொரோனாவைரஸ் தடுப்பு நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 3 மாதத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழ...
கொரோனாவைரஸ் தடுப்பு நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 3 மாதத்திற்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது கிட்டத்தட்ட 8. 3 கோடி குடும்பங்களுக்கு பலன் தரப் போகிறது.
கொரோனாவைரஸால் நாட்டின் பொருளாதாரமே முடக்கம் கண்டுள்ளது... நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் அமலிலும் உள்ளது.. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பல்வேறு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இதனால் மத்திய அரசு எப்படியும் மக்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, பொருளாதார நிவாரண நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இன்று பல்வேறு நிவாரண அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில் ஒன்றுதான் இலவசமாக கேஸ் சிலிண்டர் அறிவிப்பு.. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதை மத்திய அரசு தனது பிரதான் மந்த்ரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 8.3 கோடி குடும்பங்கள் பயன் பெறும்.
உண்மையில் இந்தத் திட்டம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பெரும் பயன் தரும். காரணம் இப்போதைய கேஸ் விலையில் பொருளாதாரம் இருக்கும் சூழலில், இந்தத் திட்டம் பெண்களுக்கு பெருமளவில் பயன் தரும்.
கடந்த 2016ம் ஆண்டு மே 1ம் தேதி இந்த உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் பெண்கள் 5 கோடி பேருக்கு கேஸ் சிலிண்டர்களை கொடுக்கும் திட்டமாகும் இது. பின்னர் இந்த இலக்கு 8 கோடியாக உயர்த்தப்பட்டது.நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை மனதில் வைத்தே இந்த அறிவிப்பினை மத்திய அரசு செய்துள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. லாக் டவுன் காரணமாக தினசரி எல்பிஜி சிலிண்டர் புக்கிங் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன... வீட்டிற்குள்ளே 21 நாட்களுக்கு நாம் இருக்க வேண்டி இருப்பதால் சிலிண்டர் உபயோகிப்பு கண்டிப்பாக அதிகரிக்கவே செய்யும்.. அதனால்தான் ஏராளமானோர் சிலிண்டர் புக்கிங் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
COMMENTS