பாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...
பாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....
மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்தில் தகுதியுடைய விவசாயிகளைக் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் கிராமங்கள் வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ், மார்ச் மாதத்துக்குள் விவசாயிகளுக்கு முதல் தவணையைச் செலுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. தகுதியான விவசாயிகளின் தகவல்கள், மாநில அரசுகளின் உதவியுடன் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய வேளாண் அமைச்சகத்தின் சார்பில் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:
விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரையுள்ள 4 மாத காலத்துக்கான உதவித்தொகை, வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியான விவசாயிகளிடமிருந்து தகவல்களைப் பெறும்போது, அவர்களின் ஆதார் எண்ணையும் பெற வேண்டும். முதல் தவணைத் தொகையைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை. ஆனால், 2-ஆவது தவணை பெற ஆதார் எண் கட்டாயம். ஆதார் எண் அளிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் ஆதார் எண் பெறப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் உதவித்தொகை பெற கணவன், மனைவி, 18 வயதுக்குள்ளான குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம், மாநில நிலஅளவைப் பதிவுகளின்படி பிப்ரவரி 1, 2019 அன்று 5 ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான நிலம் வைத்திருக்க வேண்டும். எனவே, தகுதியான விவசாயிகளிடமிருந்து பெயர், ஆதார் எண், வங்கி சேமிப்புக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண்ணை மாநிலங்கள் சேகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எத்தனை பேர்: தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 5 ஏக்கர் வரை நிலமுள்ள சுமார் 70 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஆவணங்கள் வாயிலாகச் சரிபார்க்கும் பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
விண்ணப்பப் படிவ விவரம்: கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக விவசாயிகளின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், ஆண்-பெண், பிறந்த தேதி-வயது, ஜாதி-வகுப்பு, தொழில், தொழில் செய்யும் நிறுவனம், அரசு ஓய்வூதியம் பெறுபவரா, வருமான வரி செலுத்துபவரா, ஆதார் எண், மருத்துவர் போன்ற பணிகளைச் செய்வோரா, புதிய குடும்ப எண், விவசாய நிலத்தின் புல-பட்டா எண், வேறொருவர் பெயரில் நிலம் இருந்தால் அதன் புல எண், பரப்பு, பட்டா எண், குடும்ப உறுப்பினர்களில் வேறு பெயரில் நிலம் உள்ளதா, நிலத்தின் வகைப்பாடு, கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், செல்லிடப்பேசி எண் என 23 வினாக்கள் அடங்கிய பட்டியல் அளிக்கப்படுகிறது.
உறுதி செய்யும் வி.ஏ.ஓ.க்கள்: இப்பட்டியலைப் பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கும் பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர். விவசாயிகள் அளிக்கும் படிவங்களை அப்படியே மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கக் கூடாது எனவும், ஏற்கெனவே இருக்கும் பட்டா உள்ளிட்ட விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து விவசாயிகள் தந்துள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை வி.ஏ.ஓ.க்கள் உறுதி செய்த பிறகே மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டுமென மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் தவறாக இருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் வேண்டுகோள்: இதனிடையே மத்திய அரசு அறிவித்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம் .
எனவே, விவசாயிகள் தங்களது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் வங்கிக் கணக்கு, விவசாய நில பட்டா மற்றும் சுயவிவரங்களைப் பதிவு செய்து, இத் திட்டத்தில் பயன்பெறலாம் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
"தேர்தல் நடைமுறைகளுக்கு முன்'
கௌரவ ஊக்கத் தொகை பெறத் தகுதியான விவசாயிகளின் பட்டியல் பிப்ரவரி மாத இறுதிக்குள் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கிராம நிர்வாக அதிகாரிகளும், பிற வருவாய்த் துறை உயரதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அதற்கு முன்பாகவே இந்த கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடித்துத் தர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறு-சிறு விவசாயிகள் யார்?
2 ஹெக்டேர் நிலம் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு கௌரவ ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 ஹெக்டேர் என்பது 4.94 ஏக்கர் ஆகும். தமிழகத்தில், சிறு, குறு விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பு ஏற்கெனவே உள்ளது. அதாவது, 1.25 ஏக்கர் நஞ்சை அல்லது 2.5 ஏக்கர் புஞ்சை அல்லது அதற்கும் குறைவான விவசாயம் செய்யும் விவசாயக் குடும்பத்தினரே குறு விவசாயிகளாக கருதப்படுகின்றனர்.
2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை அல்லது அதற்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்வோர் சிறு விவசாயிகளாக கருதப்படுகின்றனர்.
இந்த எண்ணிக்கை சுமார் 70 முதல் 72 லட்சம் வரை இருக்கும் என ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுள்ளது.
COMMENTS